வன்னியனூர் தலைமை ஆசிரியர் இடமாற்ற விவகாரம்: 3-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் கிராமத்தில் கருப்பு கொடி கட்டப்பட்டதால் பரபரப்பு
வன்னியனூர் தலைமை ஆசிரியர் இடமாற்ற விவகாரம் தொடர்பாக 3-வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். கிராமத்தில் கருப்பு கொடி கட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேச்சேரி,
வன்னியனூர் தலைமை ஆசிரியர்
மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் மல்லிகுந்தம் ஊராட்சி வன்னியனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சிவகுமார் பணிபுரிந்து வந்தார். இவர், திடீரென வாழ்தாசம்பட்டி பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 3 நாளாக மாணவர்கள் பள்ளியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
கருப்பு கொடி கட்டினர்
இந்தநிலையில் அந்த கிராமத்தில் ஆங்காங்கே கருப்பு கொடி ஏற்றி கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று அந்த கிராம மக்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த சதாசிவம் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரேவதி, மாவட்ட கல்வி அலுவலர் சுமதி, துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், தாசில்தார் முத்துராஜா, மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.