ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
கரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க அடுத்த மாதம் 30-ந்தேதி கடைசி நாளாகும்.
ஆதிதிராவிடர் நல விடுதி
கரூர் மாவட்டத்தில் ஒரு அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி, ஒரு அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதி, 10 அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர்கள் விடுதி, 7 அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவிகள் விடுதி என மொத்தம் 19 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர், மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள்.
விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படுகின்றன. 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா 4 இணை சீருடைகள் வழங்கப்படுகின்றன.
30-ந்தேதி கடைசி நாள்
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டிகள், வினா வங்கிகள் வழங்கப்படுகின்றன. விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள் பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமும், பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமும் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகிற ஜூன் மாதம் 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பயன்பெறலாம்
மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயன்பெறலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.