ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

62 விடுதிகள்

2022-23-ம் கல்வி ஆண்டில் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ-மாணவிகள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 14 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியும், 3 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளும், 1 பழங்குடியினர் நல மாணவியர் விடுதியும், 1 பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி விடுதியும் என மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அரியலூர் மாவட்டத்தில் 13 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 7 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியும், 1 ஆதிதிராவிடர் நல ஐ.டி.ஐ மாணவர் விடுதியும் என மொத்தம் 22 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

20-ந் தேதிக்குள்...

விடுதிகளில் சேருவதற்கு மாணவ- மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் விடுதியில் சேர்த்து கொள்ளப்படுவர். மாணவர்களுக்கு தங்களது இருப்பிடத்திற்கும் பள்ளிக்கும் இடைவெளி 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த விதி பொருந்தாது. பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் வருகிற 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

கல்லூரி மாணவ-மாணவிகள்

கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் வருகிற 18-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகளின் சேர்க்கை 2022-2023-ம் கல்வியாண்டு முதல் விடுதி மேலாண்மை அமைப்பு (Hostel Management System) என்ற செயலியின் மூலம் இணைய வழியில் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளதால் மாணவ- மாணவிகள் http://tnadw.hms.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும், இணையவழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இணைய வழியில் விண்ணப்பிக்க மாணவ- மாணவிகளுக்கு உதவிடுமாறு சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. எனவே பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ- மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த தகவல் பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story