பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மாணவர் மற்றும் மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மாணவர் மற்றும் மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:-
மாணவர் விடுதிகள்
விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாணவர்களுக்கான பள்ளி விடுதிகள் 26-ம், மாணவிகளுக்கான பள்ளி விடுதிகள் 19-ம் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் 2-ம் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவ- மாணவிகளும் சேர தகுதி உடையவர்கள் ஆவர்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர் விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சார்ந்த மாணவர்களும் குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
சலுகைகள்
விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து மாணவ-மாணவியருக்கும் உணவும், தங்கும் வசதியும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவியருக்கு 4 இலவச சீருடைகள் வழங்கப்படும்.
10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.
தகுதிகள்
விடுதிகளில் சேர பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தூரம் குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டர் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இது பொருந்தாது. விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் வருகிற 23-ந்தேதிக்குள்ளும் கல்லூரி விடுதிக்கான விண்ணப்பங்கள் ஜூலை 15-ந்தேதிக்குள்ளும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
சாதி மற்றும் பெற்றோர் ஆண்டு வருமானச்சான்றிதழ்களை விடுதியில் சேரும்போது வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதிகளிலும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ-மாணவிகள் அரசின் சலுகைகளை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.