கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

மாணவர் சேர்க்கை

தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் கரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலை பிரிவுகளில் முழுநேர வகுப்பாக இசைக்கல்வி சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது. 3 ஆண்டுகள் முறையான பயிற்சிக்குபின் அரசுதேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தற்போது 2023-24-ம் கல்வி ஆண்டிற்கான மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாதஸ்வரம், தவில் துறைக்கு எழுதப்படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

விடுதி வசதி இலவசம்

12 வயதிற்கு மேல் 25 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் சேரலாம். மாணவர்கள் பெருமளவில் சேர்ந்து பயன்பெற குறைவான பயிற்சி கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350 மட்டும் பெறப்படுகிறது. தொலைவில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு இலவசமாக தங்கும் விடுதி வசதி மற்றும் இலவசமாக அரசு பஸ்களில் இசைப்பள்ளிக்கு வந்து செல்வதற்கு இலவச பஸ் பயண அட்டையும் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு இசைக்கலை வளர இசைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் தோறும் ரூ.400 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.

முன்னுரிமை

இசைப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு அரசுத்துறை மற்றும் ஆலயங்களில் வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. வெளிநாடுகளிலும் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கலை ஆர்வமும் திறமையும் உள்ள மாணவ-மாணவிகள் கரூர் ஜவகர்பஜாரில் உள்ள இசைப்பள்ளியை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேவதி தெரிவித்துள்ளார்.


Next Story