பெரம்பலூர் அரசு இசைப்பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் அரசு இசைப்பள்ளியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி தொடங்கப்பட்டு 1998-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2023-2024 கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். இதில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் 12 முதல் 25 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.
நாதசுரம், தவில் மற்றும் தேவாரப் பிரிவுகளில் சேர தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இதர பாடப்பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இசைப்பள்ளியில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே அரசு விடுதி வசதி உண்டு. மாணாக்கர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ.400 வழங்கப்படுகிறது. அரசுப் பஸ்களில் இலவச பயண சலுகை பெறலாம். பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.350 மற்றும் பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும்.
இப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண்.1, மதனகோபாலபுரம், நான்காவது தெரு, பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலும், தொலைபேசி எண் 04328-275466 மற்றும் கைபேசி எண் 8072519559 ஆகிய எண்களின் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.