பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் பூங்கொடி தகவல்
பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் 49 அரசு விடுதிகள் உள்ளன. இதில் 28 பள்ளி மாணவர் விடுதிகளும், 14 பள்ளி மாணவிகள் விடுதிகளும், கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு விடுதியும், மாணவிகளுக்கு 6 விடுதிகளும் செயல்படுகின்றன.
மேலும் பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக் படிக்கும் மாணவ-மாணவிகளும் சேரலாம். இந்த விடுதிகளில் சேரும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் உணவு வழங்கப்படுகிறது. மேலும் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 4 இணை சீருடைகளும், 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகங்களும், மலைப்பகுதி விடுதிகளில் கம்பளி மேலாடைகளும் வழங்கப்படுகின்றன.
இந்த விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மேலும் இருப்பிடத்துக்கும் கல்வி நிறுவனத்துக்கும் இடையே குறைந்தபட்சம் 8 கி.மீ. தூரம் இருக்க வேண்டும். இந்த விதி மாணவிகளுக்கு பொருந்தாது. எனவே தகுதியுள்ள மாணவ-மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். மேலும் பள்ளி விடுதிகளுக்கு வருகிற 15-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கு ஜூலை 15-ந்தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல் விடுதியில் சேரும்போது சாதி, ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை அளிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே தகுதியுள்ள மாணவ-மாணவிகள் முறையாக விண்ணப்பித்து விடுதிகளில் சேரலாம் என்று மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.