விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பள்ளி, கல்லூரி விடுதிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ-மாணவிகளுக்கு 19 விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில் பள்ளி விடுதிகள் 15, கல்லூரி விடுதிகள் 4 செயல்படுகின்றன.
இந்த 4 கல்லூரி விடுதிகளில் 3 மாணவிகள் விடுதியும், 1 மாணவர் விடுதியும் ஆகும். மேலும் 15 பள்ளி விடுதிகளில், 8 மாணவிகள் விடுதியும், 7 மாணவர்கள் விடுதியும் ஆகும். பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவிகளும், அதற்கு மேல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி விடுதிகளில் சேர தகுதியுடைவர்கள் ஆவர்.
உணவு-சீருடை
அனைத்து விடுதி மாணவ-மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும்.10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்படும். இந்த விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரரின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்கவேண்டும்.
15-ந்தேதி கடைசி நாள்
இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர்கள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகாப்பாளர், காப்பாளினிகளிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதிக்குள்(வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்க வேண்டும்.
சான்றிதழ்கள்
மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது, சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமான சான்றிதழ் ஏதும் அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.