திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
x

கரூர் மாவட்டத்தில் திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர்

1,330 குறட்பாக்கள்

உலக பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசாக தமிழ் வளர்ச்சித்துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

2022-23-ம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1,330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்பு பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

ஒப்பிவிக்கும் திறன்

கரூர் மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிவிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவிகள் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்த போட்டியில் கலந்து கொள்ள இயலாது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைத்தளத்தில் https://tamilvalarchithurai.tn.gov.in இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை நிறைவு செய்து வருகிற 26-ந்தேதிக்குள் கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04324-255077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


Next Story