இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்ப பதிவேற்றம் செய்யலாம் என்று கல்லூரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் சிவக்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை 2022-23-ம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்று இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம் என அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி இணையதளம் வாயிலான விண்ணப்ப பதிவினை வருகிற ஜூலை 7-ந் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம். மேற்காணும் இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தாங்கள் சேர விரும்புகிற கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பம் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஒரு கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.48 மற்றும் பதிவு கட்டணம் மட்டும் ரூ.2 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் எதுவுமில்லை. பதிவு கட்டணம் மட்டும் ரூ.2 செலுத்த வேண்டும். விண்ணப்பம் மற்றும் பதிவு கட்டணத்தை இணையதளம் மூலமாக செலுத்தலாம்.
விண்ணப்பிக்கலாம்
அந்த வகையில் விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர விரும்புவோர் வருகிற 7-ந் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் 14 துறைகளுடன் ஏறத்தாழ 6,500 மாணவர்கள் படிக்கக்கூடியதாக 53 ஆண்டுகள் கடந்து சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. தகுதிவாய்ந்த மிகச்சிறந்த பேராசிரியர்களை கொண்ட இக்கல்லூரியில் மொழி பாடங்கள் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.ஏ. வரலாறு, பொருளியல், பி.காம் வணிகவியல் படிப்புகளும், அறிவியல் பிரிவில் பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் போன்ற பட்டப்படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மேலும் மொழிப்பாடங்கள் தவிர பிற வகுப்புகள் ஆங்கில வழி மற்றும் தமிழ்வழி வகுப்புகளாக நடத்தப்படுகின்றன என்றும் அனைத்து பாடங்களும் சுழற்சி-1 மற்றும் சுழற்சி-2 என இரு நேரங்களில் இயங்குவதால் விருப்பம்போல் இரு சுழற்சிக்கும் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் கணினி பயிற்சியும், மென்திறன் பயிற்சியும் வழங்கப்படுகின்றன. அதோடு தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சுருள் சங்கம், யோகா ஆகியவை திறம்பட செயல்படுகின்றன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.