ஆபாசமாக பாடம் நடத்தியதாக ஆசிரியர் மீது மாணவிகள் புகார்
திங்கள்சந்தை அருேக உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆபாசமாக பாடம் நடத்தியதாக ஆசிரியர் மீது 2 மாணவிகள் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் பள்ளிக்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினர்.
திங்கள்சந்தை:
திங்கள்சந்தை அருேக உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆபாசமாக பாடம் நடத்தியதாக ஆசிரியர் மீது 2 மாணவிகள் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் பள்ளிக்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினர்.
மாணவிகள் புகார்
திங்கள்சந்தை அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் 11-ம் வகுப்பில் படித்து வரும் 2 மாணவிகள் நேற்று முன்தினம் குழந்தைகள் உதவி மையம் உதவி எண் 1098 ஐ தொடர்பு கொண்டு தங்களுக்கு பாடம் எடுக்கும் ஒரு ஆசிரியர் ஆபாசமாக பாடம் நடத்தியதாக புகார் தெரிவித்தனர். அத்துடன் அந்த 2 மாணவிகளும் பெற்றோருடன் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்திலும் தனித்தனியாக புகார் அளித்தனர்.
அப்போது, பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்துவதாக போலீசார் மற்றும் அதிகாரிகள் மாணவிகளிடம் உறுதியளித்தனர்.
அதிகாரிகள் விசாரணை
இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பள்ளிக்கு தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி எம்பெருமாள், இரணியல் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் குமார், சுவாமிதாஸ், தனிப்பிரிவு ஏட்டு சுஜின் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது புகார் கூறிய இரண்டு மாணவிகளிடமும், சக மாணவ-மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அத்துடன் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, "புகார் அளித்த மாணவிகள் மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளோம். சம்பந்தப்பட்ட ஆசிரியரிடமும் தனியாக விசாரணை நடத்தினோம்.
நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த விசாரணை அறிக்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். இதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
ஆபாசமாக பாடம் நடத்தியதாக ஆசிரியர் மீது மாணவிகள் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.