இயற்கை முறை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் செயல்விளக்கம்
ஆலங்குளம் அருகே இயற்கை முறை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர்.
ஆலங்குளம்:
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு மாணவிகள் ஆலங்குளம் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் பயிற்சி அனுபவங்களைப் பெற்று வருகின்றனர். ஆலங்குளம் வேளாண் உதவி இயக்குநர் சிவகுருநாதன், துணை வேளாண் அலுவலர் முருகன், வேளாண் அலுவலர் சண்முகப்பிரியா ஆகியோர் மாணவிகளை வழி நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக மாணவிகள் பேபிசாலினி, ஹேனா குமாரி, இந்துஜா, கவிதா, கீர்த்தனா, லக்ஷயா ஆகியோர் ஆலங்குளம் அருகே மாறாந்தை கிராமத்தில் இயற்கை முறை வேளாண்மைக் குறித்து விவசாயிகளிடையே விளக்கி கூறினர். இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் நன்மைகளையும், இயற்கை விவசாய சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கினர். அதோடு இயற்கை விவசாய சான்றிதழ் பெறுவதால் கிடைக்கும் சலுகைகளையும், நன்மைகளையும் பற்றி விவசாயிகளிடையே எடுத்துரைத்தனர். மேலும் செயற்கை உரங்களுக்கு மாற்றான இயற்கை உரங்களை பற்றிய துண்டுபிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கினர்.