பஸ் விபத்துகளில் மாணவர்கள் மரணம்: அரசுதான் முதன்மை பொறுப்பேற்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்


பஸ் விபத்துகளில் மாணவர்கள் மரணம்: அரசுதான் முதன்மை பொறுப்பேற்க வேண்டும் -ராமதாஸ் வலியுறுத்தல்
x

பஸ் விபத்துகளில் ஏற்படும் மாணவர்கள் மரணத்திற்கு அரசு தான் முதன்மை பொறுப்பேற்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

சென்னை வண்டலூர் பகுதியில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 விபத்துகளில் அரசு பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் 2 பேர் உயிர் இழந்திருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நேற்று, சென்னை தாம்பரத்தில் இருந்து கேளம்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்த மாநகர பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்து கொண்டிருந்த மாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 11-வது வகுப்பு மாணவர் யுவராஜ், கண்டிகை என்ற இடத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். அதே பஸ்சின் பின்பக்க சக்கரம் அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்தார்.

அதேபோல், கடந்த 26-ந்தேதி தாம்பரத்தில் இருந்து திருப்போரூர் சென்ற மாநகர பஸ்சில் முன்பக்க படிகளில் தொங்கியவாறு பயணம் செய்த கேளம்பாக்கம் இந்துஸ்தான் கல்லூரி மாணவர் சஞ்சய், படியிலிருந்து தவறி விழுந்து, பின்பக்க சக்கரம் ஏறி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இத்தகைய விபத்துகளுக்கு மாணவர்களையோ, பஸ்களின் ஓட்டுனர்களையோ மட்டும் குறை கூற முடியாது. அரசு தான் இத்தகைய விபத்துகளுக்கு முதன்மை பொறுப்பேற்க வேண்டும்.

பாதுகாப்பாக பயணிக்க வேண்டும்

மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்வதற்கான முதன்மை காரணம் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படாதது தான். குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள மாணவர்கள், வேறுவழியின்றி படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணிப்பதை தவிர்க்க முடியாது.

மேலும், படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணிக்காதவாறு காவல்துறையினர் ஒழுங்குபடுத்தியிருந்தால் நேற்று நடந்த விபத்தையும், உயிரிழப்பையும் தவிர்த்திருக்கலாம். அதை செய்ய தவறிய மாநகர போக்குவரத்து கழகமும், காவல்துறையும் தான் உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டும்.

அதே நேரத்தில் மாணவர்களும் பொறுப்புடனும், கவனத்துடனும் நடந்துகொள்ள வேண்டும். சில நிமிடங்கள் கிடைக்கும் சாகச உணர்வுக்காக விலைமதிப்பற்ற உயிரை இழந்து விடக்கூடாது. பஸ்களில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்த மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்திகள் இனி வரக்கூடாது. அதற்கேற்ற வகையில் அரசு போக்குவரத்து கழகங்கள் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். மாணவர்களும் தங்களின் எதிர்காலம் - குடும்ப நலனை கருத்தில் கொண்டு பஸ்களில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story