மாணவ- மாணவிகள் யோகா செய்து அசத்தல்
நாகை அருகே உதவி கலெக்டர் தலைமையில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் யோகா செய்து அசத்தினர்.
நாகை அருகே உதவி கலெக்டர் தலைமையில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் யோகா செய்து அசத்தினர்.
யோகா தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாகை அருகே ஐசக் நியூட்டன் கல்லூரி வளாகத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால் தலைமை தாங்கி, யோகாசனம் செய்தார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் கூறியதாவது:-
யோகா பயிற்சிகளை செய்ய வேண்டியும், அதன் பயன்களை அனைவரும் பெறவேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மனநலம் மேம்படும்
யோக பயிற்சிகளை செய்தால் உடல் நலன் மட்டுமின்றி, மன நலனும் மேம்படுகிறது. மனதை புத்துணர்ச்சி ஆக்குகிறது. எப்போதெல்லாம் யோக பயிற்சிகளை செய்கிறோமோ, அப்போதெல்லாம் நம் மனதை ஒருநிலைப்படுத்தி கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் யோகா பயிற்சி செய்யலாம்.
மாணவ- மாணவிகளுக்கு ஒழுக்கம் என்பது முக்கியமானதாகும். சிறு வயதில் இருந்தே ஒழுக்கத்தை கடைப்பிடித்தால், என்னை போன்று உயர் பதவிக்கு வரலாம் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் ஆனந்த் உள்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
அரசு சித்த மருத்துவ பிரிவு
அதேபோல நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் யோகா மற்றும் சித்த மருத்துவ பிரிவு சார்பில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பத்மநாபன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், யோகா மருத்துவர் பூங்குன்றன், ஹோமியோபதி மருத்துவர் ரம்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.