சாலையில் கிடந்தசெல்போனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்கள்
சாலையில் கிடந்த செல்போனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்கள். போலீசார் பாராட்டு
குளச்சல்,
குளச்சல் இலப்பவிளை பகுதியை சேர்ந்த முகமது பயஸ், ராபில், ஷாகித் ஆகிய சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் நேற்றுமுன்தினம் மாலை பள்ளி முடிந்து குளச்சல் அருகே உடையார்விளை பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றனர். பொருட்களை வாங்கி விட்டு இரவு வீடு திரும்பினர். அப்போது சாலையில் செல்போன் ஒலிக்கும் சத்தம் கேட்டது. உடனே அவர்கள் அருகே சென்று பார்த்த போது விலை உயர்ந்த செல்போன் தொடு திரை உடைந்த நிலையில் ஒலித்து கொண்டிருப்பதை கண்டு அதை எடுத்தனர். பின்னர் மீட்கப்பட்ட செல்போனை மாணவர்கள் நேராக குளச்சல் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று இன்ஸ்பெக்டர் கிறிஸ்டியிடம் ஒப்படைத்தனர். சாலையில் கண்டெடுத்த செல்போனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவா்களின் நேர்மையை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.