மாணவர்களின் பயணம் அறிவுசார்ந்ததாக இருக்க வேண்டும்-அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேச்சு
மாணவர்களின் பயணம் அறிவுசார்ந்ததாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தெரிவித்தார்.
மாணவர்களின் பயணம் அறிவுசார்ந்ததாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி தெரிவித்தார்.
விலையில்லா சைக்கிள்
பொன்மலைப்பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 448 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கி பேசியதாவது:-
மாணவ-மாணவிகளின் பயணம் பள்ளி சார்ந்த பயணமாகவும், அறிவு சார்ந்த பயணமாகவும் இருக்க வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களிடம் வேண்டுவதெல்லாம் நல்லா சாப்பிடுங்கள், விளையாடுங்கள், படியுங்கள் என்பார். அதன் மூலம் உங்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும். நீங்கள் எதைபற்றி கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு உதவ அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் வரவேற்றார். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் சகாய ஜான்சி நன்றி கூறினார். தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி காட்டூர் 37-வது வார்டில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் ரூ.87.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
துறையூரில் வாசிப்பு இயக்கம்
துறையூர் அடுத்த பொண்ணு சங்கம் பட்டி ஊராட்சியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களிடையே நூலக பயன்பாடு மற்றும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அரசு முதன்மை செயலாளர் காக்கார்களா உஷா, ஒருங்கிணைந்த பள்ளிகள் கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வி இயக்குனர் அறிவொளி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில துறையூர் ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தர்மன் ராஜேந்திரன், திருச்சி மாவட்ட அறங்காவலர் குழு நியமன தலைவர் மெடிக்கல் முரளி, துறையூர் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன் தாஸ், துறையூர் நகராட்சி தலைவர்செல்வராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு கல்லூரி
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, துறையூர் பகுதியில் தொடங்கப்பட்ட வாசிப்பு இயக்கம் மிகப்பெரிய அளவில் மாணவர்களிடையே வெற்றி பெறும். துறையூரில் அரசு கல்லூரி அமைக்க முதல்-அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, கிராமப்புற பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த இயக்கம் பயனுள்ளதாக இருக்கும். எளிதில் பாடங்களை படிக்கவும் தன்னம்பிக்கையுடன் வாசிக்கவும் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.