படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்
முத்துப்பேட்டை-வேதாரண்யம் இடையே போதிய பஸ்கள் இயக்காததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தில்லைவிளாகம்ூ
முத்துப்பேட்டை-வேதாரண்யம் இடையே போதிய பஸ்கள் இயக்காததால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளிகள்
முத்துப்பேட்டை தில்லைவிளாகம், இடும்பாவனம் கற்பகநாதர்குளம் வழியாக அரசு பஸ் வேதாரண்யம் சென்று வருகிறது. இந்த பஸ்சில் ஆலங்காடு, கழுவங்காடு, தில்லைவிளாகம், தெற்குகாடு, தொண்டியகாடு, இடும்பாவனம், கீழவாடியகாடு, கற்பகநாதர்குளம், கரையங்காடு, மேலபெருமழை ஆகிய கிராம பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் தகட்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், ஆயக்காரன்புலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் சென்று வருகின்றனர். மேலும் வேதாரண்யத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கும் சென்று வருகின்றனர்.
ஆபத்தான பயணம்
இந்த வழித்தடத்தில் காலை நேரத்தில் போதுமான பஸ் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளி நேரத்தில் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் செல்வதால் பஸ்சில் கூட்டம் அலைமோதி வருகிறது.
இதனால் மாணவர்கள் பஸ்படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். ஒரு சில நிறுத்தங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக பஸ் நிற்காமல் செல்கிறது.
கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
இந்த வழித்தடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் முத்துப்பேட்டை- வேதாரண்யம் இடையே கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.