பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை வியந்து பார்த்த மாணவ-மாணவிகள்


பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை வியந்து பார்த்த மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் பார்வையாளர் தினத்தையொட்டி பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வியந்து பார்த்தனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வகத்தில் பார்வையாளர் தினத்தையொட்டி பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் வியந்து பார்த்தனர்.

பார்வையாளர் தினம்

காரைக்குடியில் மத்திய மின்வேதியியல் (சிக்ரி) செயல்பட்டு வருகிறது. இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக்குழுமத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்) கீழ் 37 ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று. இந்த ஆய்வகத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 26-ந்தேதி நிறுவன நாளையொட்டி பார்வையாளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி நேற்று இந்த சிக்ரி நிறுவன நாளை முன்னிட்டு பார்வையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி நேற்று காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த பார்வையாளர் தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி காலை முதல் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பஸ்கள் மூலம் மின்வேதியியல் மையத்திற்கு வந்தனர்.

நாணயம், ரூபாய் நோட்டுகளை பார்த்தனர்

அதன் பின்னர் அவர்கள் அங்கு தொழில்நுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்ட மின்சக்தியில் இயங்கும் ரிக்‌ஷா, ஸ்கூட்டர், சைக்கிள், கண்ணாடி பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரித்தல், தண்ணீரில் இருந்து பசுமை எரிசக்தி ஹைட்ரஜன் உற்பத்தி செயல்முறை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நேரில் பார்வையிட்டனர். மேலும் அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பழங்கால நாணயங்கள், நோட்டுக்களை வியந்து பார்த்தனர்.

அங்குள்ள விஞ்ஞானிகள், அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் அந்த பொருட்கள் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் நவீன கனிம மற்றும் மூலப்பொருட்கள், நோய் சம்பந்தப்பட்ட கிருமிகளை ஆராய பயன்படுத்தப்படும் உயிரி சென்சார், மின்முலாம் பூசுதல், செயல் விளக்க முறைகள் மற்றும் படங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டது. பார்வையாளர்கள் தினத்தையொட்டி காரைக்குடி புதிய மற்றும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சிக்ரிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.


Related Tags :
Next Story