23 நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவர்களின் பெற்றோர் போராட்டம்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 23 நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கக்கோரி மாணவர்களின் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டியை அடுத்த காந்திகிராமத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோர் நேற்று, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 23 நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
பள்ளி வித்யாலயா நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தலைமையில் ஒவ்வொரு மாதமும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்த வேண்டும். பள்ளியில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். பள்ளிக்கு வரும் பெற்றோர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். பள்ளி தலைமையின் கீழ் நடைபெற்ற விளையாட்டு, கல்வி சுற்றுலா, ஆண்டுவிழா ஆகியவற்றை மீண்டும் நடத்த வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு கையேடு மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.