87.97 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 87.97 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 10.61 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 87.97 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 10.61 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்-1 தேர்வு முடிவு
தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. தேர்ச்சி விபரத்தை மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன. இதன் மூலம் பிளஸ்-1 தேர்வு முடிவுகளை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் தெரிந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் 102 அரசு பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, தனியார் பள்ளிகள் உள்பட மொத்தம் 177 பள்ளிகளை சேர்ந்த 10,429 மாணவர்கள், 10,187 மாணவிகள் என 20,616 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 அரசு தேர்வை எழுதினார்கள். இவர்களில் 8,627 மாணவர்களும், 9,508 மாணவிகளும் என மொத்தம் 18,135 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
87.97 சதவீத தேர்ச்சி
தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 87.97 சதவீத தேர்ச்சியாகும். மாணவர்களின் தேர்ச்சி 82.72 சதவீதமும், மாணவிகள் 93.33 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.61 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 14,847 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள். இவர்களில் 12,471 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி 84 சதவீதமாகும். மாவட்டம் முழுவதும் 45 தனியார் பள்ளிகளும், 3 சுயநிதி பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு பள்ளிகளில் எந்த ஒரு பள்ளியும் 100 சதவீத தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ்-1 தேர்ச்சி சதவீதத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் தமிழக அளவில் 29-வது இடத்தை பிடித்தது. 2021-ம் ஆண்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 2022-ம் ஆண்டு வெளியான தேர்வு முடிவுகளின்படி தர்மபுரி மாவட்டம் தமிழகத்தில் 25-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.