ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு மாணவிகள் எதிர்ப்பு
வேலூர் ஈ.வெ.ரா. நாகம்மை மேல்நிலைப் பள்ளியில் 4 ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வேலூர் ஈ.வெ.ரா. நாகம்மை மேல்நிலைப் பள்ளியில் 4 ஆசிரியர்கள் இடமாற்றத்துக்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆசிரியர்கள் இடமாற்றம்
வேலூர் கொசப்பேட்டையில் ஈ.வெ.ரா. நாகம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்வி ஆண்டில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் தமிழ், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல் ஆசிரியர்கள் 4 பேர் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர் பள்ளியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தகவல் பரவியது. அதன்பேரில் வேலூர் தெற்கு போலீசார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாணவிகள் சிலர் நேற்று மாலை பள்ளியில் இருந்த ஆசிரியர்களிடம் இதுகுறித்து கேட்டனர். அப்போது அவர்கள் இடமாற்றம் குறித்து தங்களுக்கு தகவல் முழுமையாக தெரியாது என்றனர்.
உத்தரவை ரத்து செய்ய வேண்டும்
அதைத்தொடர்ந்து மாணவிகள் தலைமை ஆசிரியையை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து இந்த இடமாற்றம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று பதில் அளித்தார்.
ஆசிரியர்கள் மற்றும் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அவர்கள் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இது தொடர்பாக மனு அளிக்க உள்ளனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது:-
நாங்கள் அனைவரும் பொது தேர்வுக்கு தயாராகி வருகிறோம். இந்த நிலையில் திடீரென 4 ஆசிரியர்களை இடமாற்றம் செய்துள்ளனர். இதனால் நாங்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிதாக ஆசிரியர்களையும் உடனடியாக நியமிக்க மாட்டார்கள். ஏற்கனவே எங்கள் பள்ளியில் சில வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர்களை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அவர்களை இதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.