பூம்புகார் அரசு கல்லூரியில் 4-வது நாளாக மாணவர்கள் போராட்டம்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பூம்புகார் அரசு கல்லூரியில் 4-வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெண்காடு:
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பூம்புகார் அரசு கல்லூரியில் 4-வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பூம்புகார் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். குடிநீர், கழிவறை, ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
கல்லூரி வளர்ச்சி நிதியில் கையாடல் செய்த கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். தன்னாட்சி தரச்சான்றை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
மாணவர்களுடன், கல்லூரி பேராசிரியர்களும் தங்களுக்கு பணி மேம்பாடு வழங்கக்கோரி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா உள்ளிட்டோர் கல்லூரியில் ஆய்வு செய்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்களுடன் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் பேராசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட ஒப்புக்கொண்டனர். அப்போது மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் 10 முதல் 15 நாட்களுக்குள் செய்து தரப்படும் என மாவட்ட கலெக்டர் உறுதி அளித்தார். இந்த பேச்சுவார்த்தையின் போது மாணவர்கள் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
எழுத்துப்பூர்வமாக உறுதி
இதனிடையே நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வாயிலில் அமர்ந்து தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, தாசில்தார் செந்தில்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் ராஜ்மோகன், கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவ சக்திவேல் ஆகியோர் அங்கு சென்று மாணவர்களிடம் அடிப்படை வசதிகள் 15 நாட்களில் நிறைவேற்றப்படும். கல்லூரியின் முதல்வர் மாற்றப்படுவார், தன்னாட்சி அதிகாரம் உடனடியாக புதுப்பிக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர்.
அதனை ஏற்று மாணவர்கள் நாளை (இன்று) முதல் வழக்கம்போல் கல்லூரிக்கு வருகை தருவோம் என அறிவித்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 4 நாட்கள் நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் முடிவுற்றதால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வழக்கம்போல் கல்லூரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.