அரசு கல்லூரியில் பொங்கல் விழா:பஸ் கூரை மீது குத்தாட்டம் போட்ட மாணவர்கள்திண்டிவனத்தில் பரபரப்பு
திண்டிவனம் அரசு கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவின்போது மாணவர்கள் பஸ் மேற்கூரை மீது ஏறி குத்தாட்டம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் அறிவுடைநம்பி தலைமை தாங்கினார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை முனைவர் கண்ணன் செய்திருந்தார். விழாவில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு மண்பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், சிலம்பாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா முடிந்ததும் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்த மாணவர்கள் சிலர் ஆர்வ மிகுதியில் கல்லூரி முன்பு வந்த அரசு டவுன் பஸ்சை வழிமறித்து, அதன்மேற்கூரை மீது ஏறி குத்தாட்டம் போட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ரோஷணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பஸ் மேற்கூரை மீது ஏறி குத்தாட்டம் போட்ட மாணவர்களுக்கு அறிவுரை கூறி அங்கிருந்த அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவர்கள் பஸ் மீது குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலானது.