மாணவ-மாணவிகள் மொழி, சமூகநீதிக்காக பிரசாரம் செய்ய வேண்டும்


மாணவ-மாணவிகள் மொழி, சமூகநீதிக்காக பிரசாரம் செய்ய வேண்டும்
x

வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் நடந்த ‘நான் முதல்வன்’ திட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் மொழிக்காக, சமூகநீதிக்காக பிரசாரம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

வேலூர்

வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் நடந்த 'நான் முதல்வன்' திட்டம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் மொழிக்காக, சமூகநீதிக்காக பிரசாரம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

நான் முதல்வன் திட்டம்

வேலூர் முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளிடையே 'நான் முதல்வன்' திட்டம் குறித்து கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், கல்லூரி கல்வி இணை இயக்குனர் காவேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர் வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர் பேசியதாவது:-

முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் தற்போது மாணவர்களை விட மாணவிகள் தான் அதிகம் பேர் படிக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை இரு கண்களாக நினைத்து செயல்படுகிறார். இந்த துறைகளை மேம்படுத்துவது தான் அவரது நோக்கம்.

மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000

முன்னாள் முதல்-அமைச்சர்கள் காமராஜர் ஆட்சி காலத்தில் ஆரம்பப்பள்ளி, கருணாநிதி ஆட்சி காலத்தில் தமிழகத்தில் அதிக அளவில் கல்லூரிகள் திறக்கப்பட்டன. உயர் கல்வித்துறை பொற்காலமாக மாறும். அதற்கு சாதகமான சூழல் உள்ளது. இதற்கு மாணவ-மாணவிகள் ஒத்துழைக்க வேண்டும். 'நான் முதல்வன்' திட்டத்தின் நோக்கம் நீங்கள் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்பதல்ல. உங்கள் துறையில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான். நான் படிக்கின்ற காலத்தில் குறைவான பெண்களே உயர்கல்வி படிப்பதை காணமுடிந்தது.

ஆனால் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் முயற்சியால் தற்போது அதிக அளவில் பெண்கள் உயர்கல்வி கற்று வருகிறார்கள். ஆண்கள், பெண்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். அரசுப்பள்ளிகளில் படித்து அரசு, தனியார் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் மொழிக்காக, சமூககொள்கைக்காக, சமூகநீதிக்காக பிரசாரம் செய்ய வேண்டும்.

தனி கல்வி திட்டம்

தமிழகத்துக்கு என்று தனி கல்வி திட்டத்தை வகுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு குழு அமைத்துள்ளார். அந்த பணிகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள். அதனை நாங்கள் எதிர்க்கிறோம். தமிழ் தாய்மொழி, ஆங்கிலம் உலக தொடர்புமொழி. இந்த 2 மொழிகளும் நமக்கு போதும். விருப்பம் உள்ளவர்கள் இந்தி உள்பட எந்தமொழியை வேண்டுமென்றாலும் படிக்கலாம். ஆனால் இந்தி திணிப்பை ஏற்று கொள்ள முடியாது.

இந்தியா ஒரு மொழி நாடு அல்ல. பல்வேறு மொழிகள், மதம், இனம் கொண்ட நாடு. 'நான் முதல்வன்' திட்டம் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. இதில், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இருக்க கூடாது. வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.

முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் சுற்றுச்சுவர் மற்றும் மைதானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் படிப்படியாக செய்து தரப்படும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிகழ்ச்சியில், கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story