தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்க வேண்டும்
தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என வி.ஐ.டி. கிராவிடாஸ் விழாவில் ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகர் சதீஷ்ரெட்டி கூறினார்.
தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்க வேண்டும் என வி.ஐ.டி. கிராவிடாஸ் விழாவில் ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகர் சதீஷ்ரெட்டி கூறினார்.
கிராவிடாஸ் 2022
வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் கிராவிடாஸ் 2022 என்ற அறிவுசார் தொழில்நுட்பத் திருவிழாவின் தொடக்க விழா அண்ணா அரங்கத்தில் நடந்தது. வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக ராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகர் ஜி.சதீஷ்ரெட்டி கலந்து கொண்டு மாணவர்கள் அமைத்திருந்த சிறிய ரக விமானம், டிரோன் உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு அறிவுசார் தொழில்நுட்பத் திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
புதுமையான கண்டுபிடிப்புகள்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் மாணவர்கள் புதிய, புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். இந்த ஆண்டு இதுவரை 75 ஆயிரம் சுய தொழில் நிறுவனங்கள் உருவாகியுள்ளது.
இந்தியாவிலேயே புதிய, புதிய தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம். உலகிலேயே நீளமான துப்பாக்கி இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இது இந்த ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தில் புதுமையான கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்க வேண்டும். தொழில்துறை உற்பத்தி தற்போது 17 சதவீதமாக உள்ளது. இதனை 25 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளம் என்ஜினீயர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில்துறையில் உற்பத்தி அதிகமானால் வேலைவாய்ப்பும், பொருளாதாரமும் பெருகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கவுரவ விருந்தினர்களாக பெங்களூரு ஆட்டோடெஸ்க் நிறுவனத்தின் ஆசிய கல்வித்துறை தலைவர் தீபங்கர் பட்டாச்சாரியா, ஸ்னைடர் எலக்ட்ரிக் இந்தியா நிறுவன துணைத்தலைவர் சித்ரா சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கடுமையாக உழைக்க வேண்டும்
வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசுகையில், கிராவிடாஸ் 2022-ல் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஐ.டி மாணவர்களும், 5 ஆயிரம் வெளிமாநில, வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த அறிவுசார் தொழில்நுட்ப திருவிழா தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடக்கிறது. கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் நாம் குறைந்த அளவே பணம் செலவழிக்கிறோம். இதனை மத்திய, மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கும் நாடு பொருளாதாரத்திலும் முன்னேறும் என்றார்.
விழாவில் வி.ஐ.டி பல்கலைக்கழக துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், துணைவேந்தர் ராம்பாபு கோடாலி, இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் ஜெயபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாணவ ஒருங்கிணைப்பாளர் திவ்யதர்ஷினி நன்றி கூறினார்.