விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் சாதனை படைக்க வேண்டும்
விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் சாதனை படைத்து, சரித்திரம் உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.
விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் சாதனை படைத்து, சரித்திரம் உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.
இளையோர் தடகள போட்டி
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டி இன்று நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கினார்.
மாவட்ட விளையாட்டு நல அலுவலர் பாலமுருகன், திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தடகள சங்க பொருளாளர் ரமேஷ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் தடகள வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
தொடர்ந்து விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
சரித்திரம் உருவாக்க வேண்டும்
விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு கல்லூரி படிப்பிற்கும், வேலை வாய்ப்பிற்கும் தமிழக அரசு அதிக முன்னுரிமை வழங்கி வருகிறது. விளையாட்டு வீரர்கள் கல்லூரியில் பயில அண்ணா பொறியியல் கல்லூரி வாயிலாக 500 இடங்கள் ஆண்டுதோறும் ஒதுக்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் மருத்துவத்திற்கு 5 இடங்கள், காவல்துறையில் 5 சதவீத இடங்கள், மற்ற துறைகளில் 3 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தற்போது பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் பங்கேற்று தங்களின் உடல் வலிமையையும், அறிவு திறமைகளையும் வளர்த்து கொள்ள வேண்டும்.
நமது நாட்டிற்காக பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று உலகளவில் சாதனைகளை படைத்து சரித்திரத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் 14, 16, 18, 20 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் வருகிற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்வார்கள் என்று மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து மாலையில் போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது.
மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.