மாணவர்கள் சமூக வலைதளங்களை கவனமாக கையாள வேண்டும்
கல்லூரி மாணவ- மாணவிகள் சமூக வலைதளங்களை கவனமாக கையாள வேண்டும் என சேலம் அரசு கல்லூரி ஆண்டு விழாவில் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் அறிவுரை வழங்கினார்.
கல்லூரி ஆண்டு விழா
சேலம் அரசு கலைக்கல்லூரி ஆண்டு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் தலைமை தாங்கி ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்துறை தலைவர் சாந்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் கலந்து கொண்டு இளங்கலை, முதுகலை பிரிவில் துறை வாயிலாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கல்லூரி பருவத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்கம் மிகவும் அவசியமாகும். அதோடு விளையாட்டு துறையிலும் பங்கு பெற்று சாதிக்க வேண்டும். விளையாட்டுகளில் வெற்றி பெறுகிறோமோ? இல்லையோ? பங்கு பெறுவதே வெற்றியாக கருத வேண்டும்.
கவனத்துடன் கையாள வேண்டும்
கல்லூரி மாணவ, மாணவிகளாகிய நீங்கள் எதிர்காலத்தில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். போன்ற உயர் பதவிகளுக்கு வரவேண்டும். அவ்வாறு உயர் பதவிகளுக்கு வரும் பட்சத்தில் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் உங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வரவேண்டும். தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம். இன்றைய காலகட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
கணவனை காணவில்லை என்று மனைவியும், மனைவியை காணவில்லை என்று கணவனும் போலீஸ் நிலையங்களுக்கு வந்து புகார் தெரிவிக்கிற சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதற்கு சமூக வலைதளங்களே காரணம். எனவே வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை மாணவ, மாணவிகள் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். அப்படி இல்லை என்றால் விபரீதத்தில் முடிந்து விடும். கல்வி, விளையாட்டு மட்டுமின்றி தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு பல்வேறு துறைகளில் மாணவ, மாணவிகள் சாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து இந்த மாதம் பணி ஓய்வுபெறும் கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் உள்பட 5 பேராசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விழாவில் கணிதத்துறை தலைவர் சிவராம் உள்பட பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.