சமூக கடமைகள், பொறுப்புகளை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்
சமூக கடமைகள், பொறுப்புகளை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று மாவட்ட குடும்பநல நீதிபதி தேன்மொழி அறிவுரை கூறினார்.
விழுப்புரம் புத்தக திருவிழாவில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சமரச வார விழாவை முன்னிட்டு வழக்குகளை சமரச அடிப்படையில் தீர்வு ஏற்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட குடும்பநல நீதிபதி தேன்மொழி கலந்துகொண்டு பொதுமக்கள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், இன்றைய தலைமுறை மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்வுகளை தவிர்த்து புத்தகங்களை ஆர்வமுடன் படிப்பது வரவேற்கத்தக்கது. மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சமூகத்தில் தங்களுடைய கடமைகள், பொறுப்புகள் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வாழ்வில் ஒவ்வொருவருக்கும் சில சிக்கல்கள், இடர்பாடுகள் நேரிடலாம். அதுபோன்ற சமயத்தில் நாம் உடனடி தீர்வு காண நீதிமன்றங்களை நாடுகிறோம். இதற்காக ஒவ்வொரு நீதிமன்றத்திலும் சமரச மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் நீங்களே எதிர்தரப்புடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தலாம். அனைத்து பேச்சுவார்த்தைகளும் ரகசியம் காக்கப்படும். இது உங்கள் வழக்கை எந்த வகையிலும் பாதிக்காது. வழக்கில் எவ்வித மேல்முறையீடு இல்லாமலும், விரைவாகவும், இறுதியான சுமூகதீர்வு கட்டணம் ஏதுமின்றி காண முடியும். உங்களுடைய வழக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டால் நீதிமன்ற கட்டணத்தை உங்களிடமே திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிடும்.
விரைந்து தீர்வு காணப்படும்
எனவே மாணவர்கள், சமரச மையத்தின் மூலம் கிடைக்கப்பெறும் பயன்களை தங்கள் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் அனைத்தும் சமரச மையத்தில் விரைந்து தீர்வு காண்பதற்கு வழிவகை ஏற்படும். அனைவரும் இதனை அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ராஜேஷ்வர்சிம்மவர்மன், மாவட்ட சிறப்பு நீதிபதிகள் பாக்கியஜோதி, வெங்கடேசன், முதன்மை சார்பு நீதிபதி விஜயகுமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபத்ரா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பசீர், நீதித்துறை நடுவர் எண்-2 நீதிபதி அகிலா, கூடுதல் சார்பு நீதிபதி எண்-2 சுந்தரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.