மாணவர்கள் படிப்பை பாதியில் விட கூடாது
மாணவர்கள் படிப்பை பாதியில் விட கூடாது என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடக்க விழாவில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.
மாணவர்கள் படிப்பை பாதியில் விட கூடாது என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற கல்லூரி கனவு நிகழ்ச்சி தொடக்க விழாவில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.
கல்லூரி கனவு நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கல்லூரி கனவு என்று பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தொடக்க விழா இன்று திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி வரவேற்றார்.
கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் முதல்வன் திட்டம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டமாகும்.
நான் முதல்வன் என்பது எந்த செயலை செய்தாலும் அதில் முதல்வனாக திகழ வேண்டும் என்பதாகும். இந்த திட்டத்தின் முக்கியமான நோக்கம் என்பது மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி மற்றும் தொழில் கல்வி குறித்து ஆரம்ப கட்டத்திலேயே விளக்கும் வகையில் சிறப்பான வழிகாட்டுதல் வழங்குவதே ஆகும்.
கொரோனாவிற்கு பிறகு ஏராளமான மாணவர்கள் பள்ளிக்கு சென்று பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று உள்ளனர் என்பது மகிழ்ச்சியான ஒன்றாகும்.
தற்போது கல்லூரி கல்வி மற்றும் பட்டய கல்வியில் பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் வந்துள்ளது.
படிப்பை பாதியில் விட கூடாது
தேவையை அறிந்து மாணவர்கள் படிக்க வேண்டும். மாணவர்கள் சூழ்நிலையை கையாள தெரிந்து கொள்ள வேண்டும்.
எந்த பாடப்பிரிவை தேர்வு செய்தாலும் அதில் கடின உழைப்புடன் படித்து முன்னேற வேண்டும். மாணவர்கள் பெற்றோர்களின் நிலையை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வுடன் செயல்பட்டு நன்கு படித்து நல்ல வேலை செல்ல வேண்டும்.
பிளஸ்-2 படித்த முடித்தவர்கள் இப்பவே வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்.
ஆயுட் காலம் இருக்கும் வரை நாம் வேலை செய்ய தான் போகிறோம். அதனால் படிக்கும் காலத்தை விட்டு விட்டால் மீண்டும் அந்த காலம் கிடைக்காது.
பிளஸ்-2 முடித்தவர்கள் கண்டிப்பாக மேல்படிப்பு படிக்க வேண்டும். சமுதாயத்தின் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்களிப்பு அதிகம் உள்ளது.
அதனால் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் படிப்பை பாதியில் விட்டு விட கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கையேடு
முன்னதாக நான் முதல்வன் திட்டத்திற்கான கையேடுகளை மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
விழாவின் முடிவில் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த நான் முதல்வன் புத்தகத்தை உயர்த்தி காணப்பித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் சந்தோஷ், அரவிந்தன், நளினி, தயாளன் உள்பட பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி நன்றி கூறினார்.