எந்த நிலையிலும் மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது


எந்த நிலையிலும் மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

எந்தவொரு நிலையிலும் மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் பேசினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

எந்தவொரு நிலையிலும் மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது என சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் பேசினார்.

கல்லூரி விழாவில் சரத்குமார்

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் 130-வது ஆண்டு விழா நடந்து வருகிறது. 3-வது நாளாக நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் பைஜூ நிசித்பால் தலைமை தாங்கினார். முதல்வர் எட்வர்ட் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வாழ்க்கை பற்றிய சிந்தனை

ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர் தலைமுறையினரிடம் உள்ளது. இளைய தலைமுறையை ஆரோக்கியமாகவும், தன்னம்பிக்கையுடன் செயல்பட வைப்பது பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகும். மாணவர்கள் கல்லூரி பருவங்களில் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதே சமயம் வாழ்க்கை பற்றிய சிந்தனையும் மேலோங்க வேண்டும்.

சூரியவம்சம் படத்தில் "உதவாகரன்" என்ற வார்த்தை பிரபலமானது. இறைவனின் படைப்பில் நாம் அனைவரும் ஒன்று என்பதை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். மாணவர்கள் அரசியலை நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். தன்னம்பிக்கை, உழைப்பு இரண்டுமே வாழ்க்கையை உயர்த்தும். ஆசிரியர்களை மாணவர்கள் மதித்து அவர்களது பேச்சை கேட்டு நடக்க வேண்டும்.

தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது

லயோலா கல்லூரியில் நான் படித்த போது என்னால் அந்த கல்லூரியில் முதல் ஸ்டிரைக் ஏற்பட்டது. ஆனாலும் விளையாட்டு மற்றும் படிப்பில் நல்ல மாணவன் என்ற பெயர் பெற்றிருந்தேன். இளம் வயதில் கடுமையான சூழ்நிலைகளை சமாளிக்க நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய காலம் போட்டிகள் நிறைந்த ஒன்று. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இளைய தலைமுறை தங்களது வாழ்க்கையை பக்குவப்படுத்த வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது மாணவர்கள் தங்களது தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது.

வேதனை அளிக்கிறது

எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. பிரச்சினை நிறைந்த வாழ்க்கையில் தான் சுவாரசியம் அதிகமாக இருக்கும். போராடி ஜெயித்த காரியங்களில் தான் வெற்றியின் சுகத்தை நாம் முழுமையாக அனுபவிக்க முடியும். படித்த இளைஞர்கள் அரசியலில் பணியாற்ற வேண்டும். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். அதில் வரும் காட்சிகளை நம் வாழ்க்கையோடு ஒப்பிடக் கூடாது. சென்னையில் ஒரு திரையரங்கில் குறிப்பிட்ட சமுதாயத்தினரை அனுமதிக்காதது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகை அபிராமி

நிகழ்ச்சியில் நடிகை அபிராமி பேசுகையில் கூறியதாவது:-

நான் 10-ம் வகுப்பு தேர்வு முடிந்து விடுமுறையில் வீட்டில் இருந்தேன். அப்போது மலையாள டி.வி. சேனலில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். 18 வயதில் முதன் முதலாக நடிகர் கமல்ஹாசனை பார்த்தேன். அப்போது மனதில் தைரியத்தை வளர்த்துக் கொண்டு நடிகர் கமலிடம் குணா படத்தில் இடம் பெற்ற பாடலை பாடுமாறு கேட்டேன். இப்படி என்னை தெரிந்தோ, தெரியாமலோ ஒரு கூட்டத்தில் இருந்து தனியாக காட்டிக் கொண்டேன். தனி ஆளாக புலப்படும்போது எனது வாழ்க்கை திசை மாறியது. நான் விருமாண்டி படத்தில் கமல்ஹாசனுடன் நடித்த போது மறக்க முடியாத பல அனுபவங்களை தந்தது.

17-22 வயது என்பது வாழ்க்கை திசை மாறும் காலமாகும். இதில் மாணவர்கள் தங்களது தனித் திறமைகளை அறிந்து வெளிக்கொண்டு வர வேண்டும். இந்த 5 வருட காலம் உங்களுக்கு எந்தவித கவலைகளும், நெருக்கடியோ கிடையாது. படிப்பில் மட்டும் அக்கறை செலுத்த வேண்டும். வாழ்வில் நல்ல நண்பர்களை சம்பாதித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story