மாணவர்கள் கூர்ந்து கவனித்து படிக்க வேண்டும்
மாணவர்கள் கூர்ந்து கவனித்து படிக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி கூறினார்.
தமிழ் கனவு நிகழ்ச்சி
மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி கலவை ஆதிபராசக்தி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். இதில் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் சங்கத்தமிழ் மங்காத புகழ் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் திரைப்பட இயக்குனர் ராஜீமுருகன் மானிட சமுத்திரம் நாளென்று கூவு என்ற தலைப்பில் உரையாற்றினார்
கலெக்டர் வளர்மதி பேசியதாவது:-
கூர்ந்து கவனித்து படிக்க வேண்டும்
தமிழக முதல்-அமைச்சர் ஆணைக்கு இணங்க அனைத்து மாவட்டத்திலும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி இரண்டாவது கட்டமாக நடைபெற்று வருகிறது. நம்முடைய பழம் பெருமைகளை மறந்து பண்பாடு மற்றும் கலாசாரத்தை மாற்றி மேற்கத்திய கலாசாரத்திற்கு மாறும் வகையில் இருந்து வருகின்றோம். எந்தவித விஞ்ஞானமும் வளர்ச்சி அடையாத அந்த காலத்திலேயே பலவித கண்டுபிடிப்புகளும், உலகப் பிரசித்தி பெற்ற கோவில்கள் பலவற்றையும் கட்டி உள்ளார்கள். மாணவர்கள் படிக்கும் போது கூர்ந்து கவனித்து படிக்க வேண்டும்.
ஏன் என்று கேள்வி பிறந்த பிறகுதான் அறிவியல் வளர்ந்தது. தமிழர் மரபு தமிழ் கலாசாரம், தமிழ் பண்பாடு அகியவை பேச்சு வழக்கில் மட்டுமே இல்லாமல் நம் வாழ்க்கை முறையில் செயல்படுத்தும் விதமாக மாணவ மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
சான்றிதழ்
நிகழ்ச்சியில் 13 கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் தமிழ் பெருமிதம் குறித்து கேள்வி பதில் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையாளர் சத்தியபிரதாப், தாசில்தார்கள் மதிவாணன், வசந்தி, வருவாய் ஆய்வாளர் செல்வகுமார், கிராம நிர்வாக அதிகாரிகள் தீன தயாளன், ஸ்ரீதர், விஜி, வினோத், ராஜி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.