மாணவர்கள் நன்றாக படித்து லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும்


மாணவர்கள் நன்றாக படித்து லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும்
x

மாணவ-மாணவிகள் நன்றாக பாடங்களை படித்து தங்களின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

வேலூர்

மாணவ-மாணவிகள் நன்றாக பாடங்களை படித்து தங்களின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.

குழந்தைகள் தினம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட சைல்டுலைன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பில் குழந்தைகள் நண்பர்கள் வாரம் கொண்டாட்டம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா உதவி பொதுமேலாளர் மோகனவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் வரவேற்றார்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு, கல்வி உபகரணங்கள், மரக்கன்றுகள், பரிசுகள் வழங்கி குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர், "என் அன்பான தம்பி, தங்கைகளுக்கு அண்ணனின் அன்பு கடிதம்" என்ற தலைப்பில் எழுதிய கடிதத்தை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார். அதையடுத்து மாணவர்கள், கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கையில் ராக்கி கயிறு கட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மாணவர்களுடன் கலந்துரையாடல்

பின்னர் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளிடம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்துரையாடினார். அப்போது கலெக்டர், மாணவர்களிடம் தங்கள் பள்ளிக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து தெரிவிக்கலாம் என்று கூறினார். அதற்கு மாணவர்கள், பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை. போதிய விளையாட்டு உபகரணங்கள் இல்லை. அதனால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை. பள்ளியில் 10-ம் வகுப்பு வரை மட்டுமே ஆங்கில வழிக்கல்வி உள்ளது. பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கும் ஆங்கில வழியில் கல்வி கற்க ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் கேண்டீன், பள்ளிக்கு கூடுதலாக கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அவற்றை கேட்டறிந்த கலெக்டர், அடுத்த கல்வியாண்டில் விளையாட்டு மைதானம், பிளஸ்-2 வரை ஆங்கில வழிக்கல்வி, கேண்டீன் மற்றும் கூடுதலாக கழிவறைகள் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

லட்சியத்தை நிறைவேற்ற...

பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறுகையில், நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். நான் டாக்டராக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் சில காரணங்களால் டாக்டருக்கு படிக்க முடியவில்லை. பள்ளி படிப்பை முடித்து பி.எஸ்சி. வேதியியல் படித்தேன். நான் சுமார் 6 வருடங்கள் விவசாயத்தில் ஈடுபட்டேன். பின்னர் எனது பெற்றோர் வேறு வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால், 28 வயதில் தான் குருப்-1, யு.பி.எஸ்.சி.க்கு படிக்க ஆரம்பித்தேன். யு.பி.எஸ்.சி. தேர்வில் தோல்வியடைந்தேன். ஆனால் குருப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று உதவி கலெக்டராக பணியாற்றினேன்.

தொடர்ந்து பதவி உயர்வு பெற்று தற்போது இங்கு கலெக்டராக பணியாற்றி வருகிறேன். மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்களை நன்கு படித்து லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும். தினமும் சிறிய, சிறிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி, குழந்தைகள் நலக்குழு தலைவர் வேதநாயகம், சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் குணா, சைல்டுலைன் அணி உறுப்பினர்கள் சரவணன், மணிசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் இருக்கையில் அமர்ந்த மாணவி

நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாணவ-மாணவிகளிடம் தங்களின் வருங்கால கனவு, லட்சியம் குறித்து கேட்டறிந்தார். அப்போது மாணவர்கள், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆசிரியர், பேராசிரியர், போலீஸ், ராணுவம் என்று வரிசையாக கூறினர். அதில், ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று கூறிய 9-ம் வகுப்பு மாணவி துர்கா லட்சுமியை அழைத்த கலெக்டர், தனது இருக்கையில் உட்கார வைத்து உன்னுடைய கனவு நனவாகட்டும் என்று வாழ்த்து தெரிவித்தார். கலெக்டரின் இந்த செயல் அங்கிருந்த மாணவர்கள், கல்வி அதிகாரிகள் உள்பட அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. இதுகுறித்து மாணவி கூறுகையில், எனது லட்சியம் ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டர் ஆகுவது தான். எனக்கு அப்பா இல்லை. அம்மா தான் என்னை கஷ்டப்பட்டு வீட்டுவேலை செய்து படிக்க வைக்கிறார். நிச்சயம் ஐ.ஏ.எஸ். படித்து தேர்வாகி மக்களுக்கு சேவையாற்றுவேன். எனது லட்சியத்தை தெரிந்தவுடன் தனது இருக்கையில் அமர வைத்து என்னை ஊக்கப்படுத்திய கலெக்டருக்கு மிகவும் நன்றி என்று கண்ணீர் மல்க கூறினார்.


Next Story