மகளிர் சுய உதவிக்குழு, கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் படிக்கும் மாணவ- மாணவிகள்


மகளிர் சுய உதவிக்குழு, கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் படிக்கும் மாணவ- மாணவிகள்
x

பேராயம்பட்டில் வகுப்பறை கட்டிடம் இல்லாததால் கூட்டுறவு சங்க கட்டிடத்திலும், மகளிர் சுய உதவி குழு கட்டிடத்திலும் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

பேராயம்பட்டில் வகுப்பறை கட்டிடம் இல்லாததால் கூட்டுறவு சங்க கட்டிடத்திலும், மகளிர் சுய உதவி குழு கட்டிடத்திலும் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

நடுநிலை பள்ளி

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பேரயாம்பட்டு. இங்கு வடக்கு தெரு, தெற்கு தெரு, பள்ளிக்கூட தெரு, கோவில் வீதி, பழையனூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்களின் வருகைக்கு ஏற்ப பள்ளி கட்டிடம் இல்லாததால் மாணவ-மாணவிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த பள்ளியில் 4 வகுப்பறை கட்டிடம் மட்டுமே உள்ளது. மேலும் போதுமான கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியிலும், அருகில் உள்ள கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்திலும், மகளிர் சுய உதவி குழு கட்டிடத்திலும் பயின்று வருகின்றனர்.

சேதமான கட்டிடம்

மேலும் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் சேதமான நிலையில் உள்ளது. கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் தனித்தனியான வகுப்பறைகள் இல்லாததால் ஒரே வளாகத்தில் அனைத்த வகுப்பு மாணவ-மாணவிகளும் அமர்ந்து படிக்கின்றனர்.

இதனால் மாணவர்கள் சரியான முறையில் கல்வியை பயில முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், மாணவர்களுக்கு ஏற்ற வகுப்பறை கட்டிடம் இல்லை. கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் அதிகளவில் உயரமாக இருப்பதால் முன் பகுதியில் மாணவர்கள் செல்ல முடியாத அளவுக்கு உள்ளது.

மேலும் உரம் அடுக்கி வைக்கப்படும் கட்டிடத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் சேதமான நிலையில் இருக்கும் மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தில் மாணவ-மாணவிகள் பயின்று வருவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு மாணவ மாணவிகளின் வருகைக்கு ஏற்றவாறு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவது மட்டுமல்லாமல் சேதமான கட்டிடத்தில் மாணவ மாணவிகள் படிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறினர்.


Next Story