வகுப்பறை இன்றி மரத்தடி, படிக்கட்டுகளில் அமர்ந்து படிக்கும் மாணவிகள்
இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை இன்றி மரத்தடி, படிக்கட்டுகளில் அமர்ந்து மாணவிகள் படித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பெற்றோர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
படிக்கட்டுகளில் அமர்ந்து படிக்கும் மாணவிகள்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பஸ் நிலையம் பின்புறம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. 2018-ம் ஆண்டு வரை உயர்நிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 34 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 840 மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் பள்ளி மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளியில் கட்டிட வசதி இல்லை. வகுப்பறைகளும் இல்லை. இதனால் மாணவிகள் மரத்தடியிலும், கலையரங்கத்திலும், மாடி படிக்கட்டுகளிலும், வராண்டா, வாகனம் நிறுத்தும் இடத்திலும் அமர வைத்து கல்வி கற்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நோய் தொற்று பரவும்
இதனால் வெயில், மழை நேரங்களில் மாணவிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் மழை, வெயில் நேரத்தில் வகுப்புகள் எடுக்க முடியாமலும், பல வகுப்புகளில் மாணவிகள் அமர்வதற்கு போதிய இருக்கைகள் இல்லாமல் இப்பள்ளி உள்ளதால் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கவன சிதறல் ஏற்படுகிறது. மேலும் மாணவிகள் காலணி அணிந்து படிக்கட்டுகளில் நடந்து செல்லும் இடத்தில் வைத்து பாடம் எடுக்கப்படுவதால் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. பள்ளியின் சுவரில் தற்காலிக கரும்பலகை தயார் செய்து அதில் ஆசிரியைகள் மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகின்றனர். வாகனம் நிறுத்தும் இடத்தில் வைத்தும் மாணவிகளுக்கு பாடம் எடுக்கப்படுகிறது. அதில் பாடம் எடுக்கும் ஆசிரியை சிறிது நேரம் அமர்ந்து மாணவிகளுக்கு பாடம் எடுக்கக்கூட நாற்காலிகள் வசதிகள் இல்லாமல் உள்ளது.
பெற்றோர்கள் கோரிக்கை
இப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக இருந்த போது இருந்த கட்டிடத்திலேயே மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆனால் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் அதற்கு ஏற்றார் போல் கூடுதல் கட்டிட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இதனால் மாணவிகள் அரசு பள்ளியில் கூடுதலாக சேர்க்கப்பட்டும் வகுப்பறைகள் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.
மேலும் இப்பள்ளியில் போதுமான இட வசதிகள் இருந்தும் கட்டிட வசதிகள் இல்லாமல் இருக்கிறது. எனவே மாணவிகளின் நலன் கருதி அரசு புதிய கட்டிடத்தை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பள்ளி கடந்த கல்வி ஆண்டில் பொதுத்தேர்வில் 10-ம் வகுப்பில் 95 சதவீதமும், 11-ம் வகுப்பில் 89 சதவீதமும், 12-ம் வகுப்பில் 95.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.