பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
செய்யாறு அருகே ஆரம்பப் பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் மரத்தடியில் மாணவர்கள் படிக்கின்றனர்.
செய்யாறு
செய்யாறு அருகே ஆரம்பப் பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் மரத்தடியில் மாணவர்கள் படிக்கின்றனர்.
ஆரம்ப பள்ளி
வெம்பாக்கம் தாலுகா வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 50 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறைகள் சேதம் அடைந்த நிலையில் மீண்டும் 2009-10-ம் ஆண்டில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நீர் கசிவு
இந்த நிலையில் தற்போது பருவ மழை தொடங்கி 2 நாட்களாக செய்யாறு உள்ளிட்ட கிராமங்களில் பலத்த மழை பெய்ததால் வீடுகள் மற்றும் பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்து வருகின்றன. பள்ளி கட்டிடங்களில் மேற்கூரையில் மரத்தின் இலைகள் விழுந்து தேங்கி கிடப்பதால் பல பள்ளியில் கட்டிடங்களில் மழைநீர் வெளியேற வழி இன்றி தேங்கிக் கிடக்கிறது.
இதனால் மேற் கூரையில் தண்ணீர் ஊறி கட்டிடத்தின் உள்பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டு கட்டிடத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் ஆங்காங்கே விரிசல் விட்டு விழத் தொடங்குகிறது.
மரத்தடியில் மாணவர்கள்
வெங்கட்ராயன்பேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு ஆரம்பப்பள்ளியில் மேற்கூரையின் சிமெண்டு பூச்சு ஆங்காங்கே விரிசல் விட்டு கீழே விழத் தொடங்கியுள்ளது.
மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள வகுப்பறையை பயன்படுத்த முடியாமல் மாணவர்களை பள்ளிக்கு வெளியே உள்ள காலி இடங்களிலும் மரத்தின் கீேழயும் படித்து வருகின்றனர்.
பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்து, மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தும், கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிந்தும், ஆங்காங்கே மழைநீர் ஒழுகி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி கட்டிடத்தினை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் மாணவர்களை மழையில்லாதபோது மரத்தடியில் அமர வைத்துள்ளனர்.
மழை வந்தால் உடனே மாணவர்கள் பள்ளிக்குள் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இனிவரும் காலம் பருவமழை காலம் என்பதால் சேதமடைந்த கட்டிடத்தினால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க சேதமடைந்த பள்ளிக் கட்டிடத்தை இடித்துவிட்டு போர்கால அடிப்படையில் தரமான முறையில் புதிய கட்டிடத்தை கட்டித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.