பஸ் இயக்கப்படாததால் மாணவர்கள் அவதி
பஸ் இயக்கப்படாததால் மாணவர்கள் அவதிப்பட்டனர்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் அருகே மேலாண்மறைநாடு கிராமம் உள்ளது. இந்த பகுதிக்கு ராஜபாளையத்தில் இருந்து சத்திரப்பட்டி, நத்தம்பட்டி, கோபாலபுரம், சிவலிங்காபுரம், நரிக்குளம், வலையபட்டி ஆகிய பகுதிகள் வழியாக தினசரி காலை 10 மணிக்கு பஸ் வந்து செல்கிறது. சில நேரங்களில் பஸ் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. சில நாட்களில் பஸ்கள் வருவதில்லை.
தற்போது தேர்வு நடந்து வருவதால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியுமா என மாணவர்கள் அச்சப்படுகின்றனர். ஆதலால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ராஜபாளையத்தில் இருந்து மேலாண்மறைநாடு வரும் பஸ்சை தினசரி குறித்த நேரத்தில் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.