அரசு பள்ளி முன்பு தண்ணீர் தேங்கியதால் மாணவிகள் அவதி


அரசு பள்ளி முன்பு தண்ணீர் தேங்கியதால் மாணவிகள் அவதி
x

வேலூரில் பலத்த மழையால் அரசு பள்ளி முன்பு தண்ணீர் தேங்கியது. இதனால் மாணவிகள் அவதியடைந்தனர்.

வேலூர்

பலத்த மழை

வேலூரில் கோடைகாலம் முடிவடைந்ததன் அறிகுறியாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை சாரல் மழையாகவும், பலத்த மழையாகவும் பெய்து வருகிறது. சில நேரங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். நேற்று முன்தினம் இரவும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் பிற்பகல் 2 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்யத்தொடங்கியது.

இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர். வேலூர்- ஆற்காடு சாலை குண்டும், குழியுமாக காட்சியளித்ததால் மிகவும் சிரமப்பட்டு சென்றனர். மேலும் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. மழை சுமார் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. பல்வேறு இடங்களில் தெருக்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்து குளம்போல் தேங்கியது.

மாணவிகள் அவதி

இதனால் பள்ளி முடிந்ததும் மாணவிகள் அந்த பகுதி வழியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். வீட்டுக்கு செல்வதற்காக வேறு வழியில்லாமல் பள்ளி முன்பு உள்ள ஒரு தனியார் இடத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி உள்ள பாதை வழியாக மாணவிகள் சென்றனர்.

மழைக்காலம் மட்டுமின்றி எப்போதும் பள்ளி முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் எங்களுக்கு சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் மழைநீரும் அதிகமாக தேங்கி நிற்கிறது. தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள் வேதனை தெரிவித்தனர்.

வேலூர் மழையினால் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவ- மாணவிகள் குடைபிடித்தபடியும், நனைந்தும் வீட்டுக்கு சென்றனர்.


Next Story