போட்டிகளில் பங்கேற்க மாணவர்கள் தீவிர பயிற்சி
கோத்தகிரி காந்தி மைதானத்தில் போட்டிகளில் பங்கேற்க மாணவர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி நகரின் மைய பகுதியில் உள்ள காந்தி மைதானத்தில் கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, கூடைப்பந்து விளையாட வசதிகள் உள்ளன. மேலும் புயல் நிவாரண கூட உள்ளரங்கில் பூப்பந்து மைதானம் உள்ளது. இந்தநிலையில் பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் மற்றும் தடகள போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. போட்டிகளில் வெற்றி பெறும் நோக்கில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளை அந்தந்த பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள் கோத்தகிரி காந்தி மைதானத்திற்கு அழைத்து வந்து பயிற்சி அளித்து வருகின்றனர். குறிப்பாக கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, இறகுப்பந்து விளையாட்டுகளில் தீவிர பயிற்சியளித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் கால்பந்து அகாடமிகளும் ஆண்டு முழுவதும் சிறுவர்கள், சிறுமிகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் காந்தி மைதானம் காலை மற்றும் மாலை வேளைகளில் விளையாட்டு வீரர்களால் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மைதானம் களைகட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.