தகர கொட்டகையில் அமர்ந்து கல்வி கற்கும் மாணவர்கள்
மணல்மேடு அருகே பள்ளி மேற்கூரை சேதமடைந்ததால் தகர கொட்டகையில் அமர்ந்து மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். எனவே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணல்மேடு;
மணல்மேடு அருகே பள்ளி மேற்கூரை சேதமடைந்ததால் தகர கொட்டகையில் அமர்ந்து மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். எனவே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள மண்ணிப்பள்ளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.இந்த பள்ளி பழமையான கான்கிரீட் கட்டிடத்தில் இயங்கி வந்த நிலையில் பள்ளி மேற்கூரை சிமெண்டு காரைகள் திடீரென பெயர்ந்து விழுந்தது. பல முறை பள்ளி கட்டிட மேற்கூரை சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்ததால் உடனடியாக பள்ளியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு பல முறை கோரி்க்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
தகர கொட்டகை
இதனால் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே 100 மாணவர்கள் பயின்று வந்த இந்த பள்ளியில் பல மாணவர்களின் பெற்றோர்கள் வேறு பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அழைத்து சென்று சேர்த்து உள்ளனர். தற்போது 2 ஆசிரியர்களுடன் 40- க்கும் குறைவான மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் சுற்றுச்சுவர்கள் இடிந்து போன நிலையில் மாணவ- மாணவிகள் பாதுகாப்பற்ற முறையில் பள்ளிக்கு வருவதை கருத்தில் கொண்டு அங்கு பாடம் நடத்தி வரும் ஆசிரியர்களே தங்கள் சொந்த செலவில் தகரக் கொட்டகை அமைத்து அதில் பாடம் நடத்தி வருகிறர்கள்.1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ- மாணவிகளும் ஒரே தகரக் கொட்டகையில் அமர்ந்து பாடம் படித்து வருகின்றனர். அருகில் அரசு பள்ளிகள் எதுவும் இல்லாத நிலையில் வைத்தீஸ்வரன் கோவில் அல்லது மணல்மேடு செல்ல வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
புதிய கட்டிடம்
இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் அனைவரும் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ளதால் வசதியின்மை காரணமாக தொலைதூர பள்ளிக்கு செல்ல முடியவில்லை. தற்காலிக தகரக் கொட்டகையில் பள்ளி நடந்து வந்தாலும் மழைக்காலம் தொடங்கும் போது விஷ ஜந்துக்கள் உள்ளே வர வாய்ப்பு உள்ளது.எனவே மாணவ- மாணவிகள் நலன் கருதி உடனடியாக பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.