தேர்வு முடிந்ததும் வகுப்பறைகளில் பொருட்களை சேதப்படுத்திய மாணவர்கள்
தேர்வு முடிந்ததும் வகுப்பறைகளில் பொருட்களை மாணவர்கள் சேதப்படுத்தினர்.
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த 10-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வு நேற்றுடன் நிறைவுபெற்றது. மணப்பாறையை அடுத்த புத்தானத்தத்தில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 140 மாணவர்கள் உள்பட 320 பேர் 12-ம் வகுப்பு தேர்வை எழுதினர். தேர்வு முடிந்ததும் மாணவர்கள் சிலர் சுமார் 17 வகுப்பறை கட்டிடங்களில் உள்ள மின் விசிறி, மின் விளக்கு, கதவு, மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த புத்தானத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தேர்வு மைய கண்காணிப்பாளர் புத்தானத்தம் போலீசில் புகார் அளித்தார். போலீசாரின். முதல் கட்ட விசாரணையில் 4 மாணவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. போலீசார் அந்த மாணவர்கள் பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.