மாணவர்கள் விமானம் மூலம் கல்வி சுற்றுலா சென்றனர்
விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த தூத்துக்குடியிலுள்ள ஒரு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் கல்வி சுற்றுலா சென்றனர்.
தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ரமா. இவரது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை எடுத்து உள்ளனர். இதனை தவிர்ப்பதற்காக ஆசிரியை ரமா, இனிமேல் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்து உள்ளார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. மாணவர்கள் விடுமுறை எடுப்பதும் குறைந்தது. இதனால் மாணவர்களை சென்னைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். இதற்கு பள்ளி செயலாளர் ஏ.பி.சி.வீ. சண்முகம் அனுமதி அளித்ததோடு, பயண் செலவில் பள்ளி நிர்வாகமும் பங்களிப்பு அளித்து உள்ளது.
இதனை தொடர்ந்து வகுப்பில் உள்ள 12 மாணவர்களையும், விமானத்தில் முற்றிலும் இலவசமாக சென்னைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, ஆசிரியைகள் ரமா, சரசுவதி, அந்தோணி ஆஸ்மின் ஆகியோர் மாணவ, மாணவிகளை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றனர். அங்கு வண்டலூர் உயிரியல் பூங்கா, வள்ளுவர் கோட்டம், மெரீனா கடற்கரை உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தனர். அதன்பிறகு சென்னையில் இருந்து ரெயில் மூலம் தூத்துக்குடிக்கு வந்தனர். விமானத்தில் சுற்றுலா சென்ற பள்ளி மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்து, பள்ளி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனர்.