போதையால் பாதை மாறும் மாணவர்கள்; நல்வழிப்படுத்துவது எப்படி?
போதையால் பாதை மாறும் மாணவர்களை நல்வழிப்படுத்துவது எப்படி? என்று ஆசிரியர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாகப் பார்க்கப்பட்டன.
இப்போது அது ஒரு கவுரமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறைகள் அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிறபோது வெட்கப்பட்டே தீரவேண்டும்.
விதிகளால் என்ன பயன்?
கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.
21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.
விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.
புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுப்பாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.
வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.
முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.
இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.
இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிநிலைக்கு இழுத்துப்போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின்னாட்களில் சமூகக் குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.
போதைப்பொருட்கள்
'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். போதைப் பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் போதைப் பொருட்கள் கடத்தல், விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இருந்தாலும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.
சென்னை மாநகரில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் பிடிபடும் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.
போதைப் பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
ஆசிரியர் கையில் உள்ளது
பாளையங்கோட்டை பள்ளி ஆசிரியர் பால் கதிரவன்:-
கொரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருந்தனர். அப்போது புறச்சூழல் காரணியால் சிலர் மட்டும் புகையிலை, மது போன்ற பழக்கத்துக்கு ஆளாகி இருந்தனர். பள்ளிக்கூடம் திறந்த பிறகு 3 மாதங்கள் அவர்களை வகுப்பறையில் உட்கார வைத்து பாடம் நடத்துவதே பெரிய பாடாகி விட்டது. தற்போது அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி, வழக்கமான பாடங்களை கவனிக்கிறார்கள்.
பள்ளி, கல்லூரி பருவத்தில் மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்கும் பொறுப்பு ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. மேலும் விளையாட்டு, கலைத்திறன் போட்டிகளில் அவர்களை பங்கேற்க வைத்து ஊக்கப்படுத்த வேண்டும்.
தலைமை ஆசிரியர்
பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை அகஸ்டின் ஜான் பீட்டர்:-
மாணவர்களை நல்வழிப்படுத்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நல்லொழுக்க பாடங்கள் நடத்தப்படுகிறது. 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் அவர்கள் வாழ்க்கை தடம் மாறாமல் செல்ல ஆசிரியர்கள் நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்கிறார்கள். போதை பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள் ஆசிரியரின் கட்டளைக்கு அடிபணிய மாட்டார்கள். கல்வியை தவிர்க்க விரும்புவார்கள்.
இதை தடுக்க எங்களது பள்ளியில் போதை ஒழிப்பு இயக்கம் உள்ளது. அதில் ஒரு ஆசிரியர் தலைமையில் 25 மாணவர்கள் குழுவாக செயல்படுகிறார்கள். இதன் மூலம் மாணவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் ஆசிரியர்கள் ஒத்துழைப்பு இருப்பதுடன், போலீசாரின் பங்களிப்புதான் மிக முக்கியமானது ஆகும்.
உதவி தலைமை ஆசிரியரும், விடுதி இயக்குனருமான மனுவேல் சவேரியார்:-
பெற்றோர் கண்காணிப்பில் இருக்கும் மாணவர்கள் பெரும்பாலும் தவறான வழிக்கு செல்வதில்லை. தடம் மாறி செல்பவர்களை யாருக்கும் தெரியாமல் அழைத்து உரிய கவுன்சிலிங் எனப்படும் ஆற்றுப்படுத்துதல் மேற்கொள்ள வேண்டும். மனம் திருந்தி விட்டால் மற்ற மாணவர்களை விட சிறந்த மாணவர்களாக முன்னேறி விடுவார்கள்.
தேசிய மாணவர் படை
நெல்லையை சேர்ந்த தேசிய மாணவர் படை (என்.சி.சி.) ஆசிரியர் அருள்ராஜ்:-
பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்கு அரசு பல்வேறு வழிவகைகளை செய்து உள்ளது. அதில் ஒன்றுதான் என்.சி.சி. எனப்படும் தேசிய மாணவர் படை அமைப்பு ஆகும். இதன் மூலம் மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அணி நடை பயிற்சி, ஒற்றுமை -ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கிறோம். அவர்களது தேசப்பற்று, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறோம். இதன் மூலம் மாணவர்களிடம் தேசிய உணர்வு வளருகிறது.
உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே நன்றாக படிக்க முடியும். மாணவர்களை ஆசிரியர்கள் நேரடியாக கண்காணித்து, அவர்கள் வழி தவறாமல் பயிற்சி அளிப்பதன் மூலம் தீய பழக்கவழக்ககளில் சிக்காமல் முன்னேறுவார்கள்.
அக்கறை காட்டுவதில்லை
வாசுதேவநல்லூரைச் சேர்ந்த ஐ.கணேசன்:-
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ அதேபோன்று பொதுவான பழக்க வழக்கங்கள், நல்லது கெட்டது போன்றவற்றை சொல்லிக் கொடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை. இதனால் குழந்தைகள் தவறான சில வழிகளை தேர்வு செய்து விடுகின்றனர். குழந்தைகளுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். இதனாலும் அவர்கள் தவறான வழிக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் நட்பு வட்டாரத்தில் ஒருவர் செய்வதை மற்றொருவர் செய்கிறார்கள். முந்தைய காலங்களில் நட்பாகப் பழகுகிறவர்கள் நல்லதை கூறி பழகி உள்ளனர். இன்று அப்படி இல்லை. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பெற்றோரும் செயல்பட வேண்டும்.
இயலாத காரியம்
தென்காசி அருகே உள்ள கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் இள.பாபுவேலன்:-
பள்ளி மாணவர்கள் தற்போது போதை பழக்கத்திற்கு அடிமையாவது அதிகரித்து வருகிறது. அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் எப்போதும் கண்காணிப்பது இயலாத காரியம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் நேரம், திரும்பும் நேரம் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். தங்கள் குழந்தைகளின் நண்பர்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளி அளவில் மக்களோடு இணைந்த "போதை ஒழிப்பு" குழு உருவாக்க வேண்டும். பள்ளியை சுற்றி இருக்கும் கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்கிறார்களா? என்பதை சுகாதார அலுவலர்கள் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மாணவர்கள் தவறான வழிகளில் செல்வதை தடுக்க முடியும்.
மதுபானம் எப்படி கிடைக்கிறது?
தமிழ்நாடு 'டாஸ்மாக்' பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.தனசேகரன்:-
இன்றைய காலக் கட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைக் கலாசாரம் உருவாகி உள்ளது. குடிப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகி வருவது உண்மைதான். ஆனால் 'டாஸ்மாக்' கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது இல்லை. பள்ளி மாணவர்கள் 'டாஸ்மாக்' கடைகள் முன்பு நின்றுக்கொண்டிருக்கும் மதுப்பிரியர்களிடம் ரூ.5, ரூ.10 கூடுதல் விலை கொடுத்து எப்படியோ மதுபாட்டில்களை வாங்கி விடுகிறார்கள்.
அதேப்போன்று பார் ஊழியர்கள் மூலமாகவும் வாங்கி விடுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. சில மாணவர்கள் போதையிலே பள்ளிக்கு சென்று வருகிறார்கள் என்று வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு மதுப்பாட்டில்களை வாங்கித் தரும் நபர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
எதிர்பார்ப்பு
மாணவர்கள் நல்லப்பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொண்டு கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமே தவிர, போதைப் பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தவறான பாதையில் சென்று வாழ்க்கையில் தடம் மாறி விடக்கூடாது என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுரையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றன.