பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு கூலி வேலைக்கு சென்ற மாணவ- மாணவிகள்: மலைக்கிராமங்களில் மீட்கப்பட்டவர்களுக்கு கல்வி ஆர்வம் ஏற்படுத்த சுற்றுலா


பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு கூலி வேலைக்கு சென்ற மாணவ- மாணவிகள்:  மலைக்கிராமங்களில் மீட்கப்பட்டவர்களுக்கு கல்வி ஆர்வம் ஏற்படுத்த சுற்றுலா
x

கூலி வேலைக்கு சென்ற மாணவ- மாணவிகள்

ஈரோடு

பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு கூலி வேலைகளுக்கு சென்ற மலைக்கிராம மாணவ-மாணவிகளை தொண்டு அமைப்பினர் மீட்டு கல்வி ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா அழைத்துச்சென்று திரும்பி உள்ளனர்.

கல்வி சுற்றுலா

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை, கடம்பூர் மலை மற்றும் தாளவாடி மலைக்கிராமங்களின் கல்வி சேவை செய்யும் அமைப்பாக சுடர் தொண்டு அமைப்பு உள்ளது.

இந்த அமைப்பின் நிறுவனர் நடராஜ், கூடுதல் இயக்குனர் தீரா தேன்மொழி ஆகியோர் மலைக்கிராமங்களை சேர்ந்த 40 மாணவ-மாணவிகளை சென்னைக்கு கல்வி சுற்றுலா அழைத்துச்சென்று திரும்பி உள்ளனர்.

கூலித்தொழில்

இதுபற்றி சுடர் தொண்டு அமைப்பு நிறுவனர் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது:-

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து வகை பள்ளிக்கூடங்களும் அடைக்கப்பட்டபோது மலைக்கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கும் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், பள்ளிக்கூடம் திறந்தபோது பல மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லவில்லை. கரும்பு வெட்டும் கூலித்தொழில் உள்பட பல்வேறு கூலித்தொழில்களுக்கு சென்று பழக்கப்பட்டு விட்டனர்.

இல்லம்தேடி கல்வி உள்பட பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டாலும், மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு திரும்ப வரவில்லை. இந்தநிலையில், சுடர் தொண்டு நிறுவனத்தின் சிறப்பு பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. இங்கு படித்த மாணவ-மாணவிகளின் பெயர்கள் அனைத்தும் அருகில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்பட்டதால், அந்த மாணவ-மாணவிகளின் நிலை குறித்து அறிய ஒரு ஆய்வு மேற்கொண்டோம்.

கல்வியில் ஆர்வம்

நாங்கள் செய்த ஆய்வில், எங்கள் குழந்தைகள் மட்டுமின்றி, இன்னும் ஏராளமானவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி கூலி வேலைகளுக்கு சென்று வருவது தெரிந்தது. எனவே அவர்களுக்கு கல்வி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கல்வி சுற்றுலா அழைத்துச்செல்ல முடிவு செய்தோம்.

அதன்படி பர்கூர், ஊசிமலை, துர்சனாம்பாளையம், தாமரைக்கரை, கொங்காடை, பெரியகுன்றி, இந்திராநகர் கிராமங்களை சேர்ந்த 23 மாணவர்கள், 17 மாணவிகள் என 40 பேரை மீட்டு 4 நாட்கள் சுற்றுலாவாக சென்னை விமானநிலையம், மெட்ரோ ரெயில், பிர்லா கோளரங்கம், கிண்டி சிறுவர் பூங்கா, அருங்காட்சியகம், மெரினா கடற்கரை அழைத்துச்சென்றோம். இப்போது மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதாக உறுதி அளித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story