கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முதல்வர் அறிவிப்பு
கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், சேர விரும்பும் இளநிலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த கல்லூரியில் 19 இளநிலை, 15 முதுநிலை, 12 ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளியல், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், வேதியியல், சமூகப்பணியியல், பொது நிர்வாகம், புள்ளியியல் மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய 15 பாடப்பிரிவுகளில் முதுநிலைப் படிப்புகள் வழங்கப் படுகின்றன.
இப்படிப்புகளில் சேர விரும்புகிற இளநிலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான இணையதளமான www.tngasapg.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வருகிற 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.58 மற்றும் பதிவு கட்டணம் ரூ.2 ஆகும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மாணவர்களுக்கு பதிவுக் கட்டணம் ஏதும் இல்லை. இளநிலை பட்டப்படிப்பு முடித்து முதுநிலை படிப்புகளில் சேர விரும்புகிற மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.