பிளஸ்-2 தேர்வை உற்சாகத்துடன் எழுதிய மாணவ-மாணவிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் எழுதினார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் எழுதினார்கள்.
கலெக்டர் ஆய்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 ஆயிரத்து 930 மாணவர்களும், 8 ஆயிரத்து 147 மாணவிகளும் என மொத்தம் 16 ஆயிரத்து 77 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 269 பேர் தனித்தேர்வர்களும், 88 பேர் மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். மாவட்டம் முழுவதும் இந்த தேர்விற்காக 65 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு பணியில் 1,025 பேர் ஈடுபட்டுள்ளனர். தேர்வு நடைபெற்றதையொட்டி நேற்று காலை ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திடீரென்று சென்று ஆய்வு செய்தார். தேர்வுப்பணியில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி மேற்கொண்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் மூலம் உரிய பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
889 பேர் தேர்வு எழுத வரவில்லை
அதேபோல் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் போதிய குடிநீர் வசதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற தேர்வில் மாவட்டத்தில் 889 பேர் தேர்வு எழுதவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல்நாளான நேற்று தமிழ் தேர்வில் அதிகளவில் மாணவ-மாணவிகள் தேர்வில் கலந்துகொள்ளாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
கலெக்டரின் இந்த ஆய்வின் போது பயிற்சி உதவி கலெக்டர் நாராயண சர்மா, முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர். அதே நேரத்தில் பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் தமிழ் தேர்வை எழுதினார்கள். கேள்விகள் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதி முடித்த பிறகு மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.