தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு
மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர்,
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து சுதந்திர போரிட்டதால் ஆங்கிலேயர்களால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். இதனையடுத்து அரசு சார்பில் மருதுபாண்டியர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டு இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24-ந் தேதி மருது பாண்டியர்களின் நினைவு தினம் அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வருகிற 24-ந் தேதி மருதுபாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழாவாக அனுசரிக்கப்பட உள்ளது. இதில், ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு மருதுபாண்டியர்களின் சிலைகள் மற்றும் நினைவுதூணுக்கு அஞ்சலி செலுத்த வருவார்கள். இதை முன்னிட்டு தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் நேற்று மாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று மருது பாண்டியர்களின் நினைவுதினம் வருவதால் கூடுதல் பாதுகாப்பு குறித்து ஐ.ஜி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், டி.ஐ.ஜி. மயில்வாகன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.