கீழடி புதிய அகழ் வைப்பக கட்டிட பணி குறித்து அமைச்சர் ஆய்வு
கீழடி புதிய அகழ் வைப்பக கட்டிட பணி குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
திருப்புவனம்,
கீழடியில் புதிதாக கட்டபட்டு வரும் அகழ் வைப்பக கட்டிடப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு செய்தாா்.
ஆய்வு
சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வுகள் நடந்து, பல்லாயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்த பொருட்கள் பல்வேறு இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு விரைவில் தொடங்க இருக்கிறது. ஏற்கனவே கிடைத்த அகழாய்வு பொருட்களை கீழடியிலேயே காட்சிப்படுத்தி, அதை சிறந்த சுற்றுலா தலமாகவும் மாற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனவே ெகாந்தகை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் தமிழக அரசால் அகழ் வைப்பகம் கட்டப்பட்டது. செட்டிநாடு பாரம்பரிய கட்டிடக்கலையில் இது கட்டப்பட்டு உள்ளது. அங்கு ஒவ்வொரு கட்ட அகழாய்வு பொருட்களையும் தனித்தனியாக காட்சிப்படுத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த அகழ்வைப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிலையில் கீழடியில் கட்டப்பட்ட புதிய அகழ்வைப்பக கட்டிடப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது தமிழக அரசின் முதன்மைச்செயலாளர் (சிறப்பு செயலாக்க திட்டம்) உதயச்சந்திரன், மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
செட்டிநாடு கலைநயம்
இது குறித்து அமைச்சா் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
தற்போது அகழாய்வு பணிகளில் கிடைக்க பெறும் தொல்பொருட்களை பார்க்கும் போது தமிழர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது. இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருளை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாகவும், அந்த பொருட்களை பொதுமக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையிலும் செட்டிநாட்டு கலைநயத்துடன் ரூ.11.03 கோடி செலவில் புதிய அகழ் வைப்பக கட்டிட பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் அகழாய்வின்போது கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏதுவாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டு அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தொிவித்தார்
இந்த ஆய்வின்போது தொல்லியல்துறை ஆணையர் (மு.கூ.பொ) சிவானந்தம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் சத்தியமூர்த்தி, கீழடி கட்டிட மைய பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் மணிகண்டன், கீழடி அகழாய்வு இணை இயக்குனர் ரமேஷ் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.