விருதுநகர் புதிய பஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு


விருதுநகர் புதிய பஸ் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் புதிய பஸ் நிலையம் செயல்படாமல் முடங்கியுள்ள நிலையில் நேற்று பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் புதிய பஸ் நிலையம் செயல்படாமல் முடங்கியுள்ள நிலையில் நேற்று பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

புதிய பஸ் நிலையம்

விருதுநகரில் சாத்தூர் ரோட்டில் காமராஜர் பெயரிடப்பட்ட புதிய பஸ் நிலையம் கடந்த 33 ஆண்டுகளாக செயல்படாத நிலையில் முடங்கி உள்ளது. இந்த பஸ் நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு நேரடி ஆய்வு மேற்கொண்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். இது குறித்து பல்வேறு கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டும் இன்னும் புதிய பஸ் நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பாடில்லை.

விருதுநகர் நகர சபை தலைவரும், கவுன்சிலர்களும் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று சாத்தூர் ஆர்.டி.ஓ. அனிதா தலைமையில் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அதிகாரி பாஸ்கரன், நகர சபை என்ஜினீயர் மணி, போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செயல்படுத்துவது எப்போது?

ஆய்வின் போது புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் எந்த வழியாக இயக்கப்பட வேண்டும் என்பது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. இதுகுறித்து சாத்தூர் ஆர்.டி.ஓ, அனிதா தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:- மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் விருதுநகர் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்கள் எந்த வழியாக இயக்கப்பட வேண்டும் என்பது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் வட்டார போக்குவரத்து அதிகாரி மற்றும் போலீசாருடன் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் புதிய பஸ் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் குறித்தும் நகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. இது குறித்த அறிக்கை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு மாவட்ட நிர்வாகம் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்துவது குறித்து முடிவெடுக்கும் என்று கூறினார்.


Related Tags :
Next Story