பூமாலை வணிக வளாகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
நாமக்கல் பூமாலை வணிக வளாகத்தில் கலெக்டர் உமா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கலெக்டர் ஆய்வு
நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள பூ மாலை வணிக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் உமா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்கு செயல்படும் மகளிர் சேவை மையத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், பூ மாலை வணிக வளாகத்தில் உள்ள மொத்த கடைகளின் எண்ணிக்கை, அதன் வாடகை கட்டண விவரங்கள், கடை ஒதுக்கீடு செய்யப்படும் நடைமுறைகள், இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து புதன் சந்தை அருகில் செயல்பட்டு வரும் நைனாமலை உழவர் அங்காடியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது இந்நிறுவனத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை குறித்தும், வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உதவித்தொகை விவரம், இந்நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் கடலை எண்ணெய் தயாரிக்கும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
பின்னர் சிங்களாந்தபுரம் ஊராட்சி, எம்.ஜி.ஆர். காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி புதிதாக அமைக்கப்பட்டு உள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு, இதன் மூலம் வழங்கப்படும் குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை, பயன்பெறும் குடியிருப்புகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களிடம் குடிநீர் முறையாக வினியோகிக்கப்பட்டு வருகின்றதா? எனவும் கேட்டறிந்தார்.
மேலும் ராசிபுரம் தாலுகா பெருமாகவுண்டம்பாளையம், தொ.ஜேடர்பாளையம், காக்காவேரி ஆகிய இடங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது இணையவழி பட்டாவை விரைந்து வழங்கிடவும், நிலுவையிலுள்ள அனைத்து பணிகளையும் உடனடியாக முடிக்கவும் வருவாய்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் கணேஷ் பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் தனம், சிங்களாந்தபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் புஷ்பா ஆகியோர் உடன் இருந்தனர்.