மத்திய தலைமை செயலக திட்ட குழுவினர் ஆய்வு
கணியம்பாடி ஒன்றியத்தில் மத்திய தலைமை செயலக திட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசு திட்ட பணிகளை மத்திய தலைமை செயலக திட்டக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெற்ற பணிகள், பஞ்சாயத்து அலுவலக கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், வேளாண்மைத்துறை மூலம் நடைபெற்ற திட்டங்கள், புதுவாழ்வு திட்டம் மற்றும் பல்வேறு மத்திய அரசு நிதிகளில் நடைபெற்ற பணிகள் மற்றும் நடைபெற்று கொண்டிருக்கும் பணிகளை ஆய்வுசெய்தனர்.
டெல்லி ஊரக வளர்ச்சி திட்ட மத்திய குழு உறுப்பினர்கள் தரஞ்சித்சிங், ஆசீஸ்சாவல், பல்லவ், லியோன்லால்முவான், பசியானமுஸ்ஹவுசில், கினகான்ஷியம் டோம்பிளிங், ரமேஷ்குமார் மற்றும் தினேஷ்குமார் பிரஜாபதி ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன்பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், ஒன்றிய பொறியாளர் கவிதா, பணி மேற்பார்வையாளர் தேவகி, செல்வகுமார், கலைவாணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்